மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது கொடைக்கானல். மலைகளின் இளவரசி ( Princess of Hill Stations) என அழைக்கப்படுகிறது. இந்த மலைக் கூட்டங்களை பொதுவாக பழனி மலைகள் என்று அழைப்பார்கள். இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது.
1845 - ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஓய்வுக்காக தேர்ந்தெடுத்த இடம் கொடைக்கானல்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன. அதனால் இம்மலையில் உள்ள முருகன் கோவிலுக்கு குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்றே பெயருண்டு. கடைசியாக இந்த மலர்கள் 2006-ஆம் ஆண்டு பூத்தன.
22 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த மலை வாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் (6998அடி) உயரத்தில் உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பாக எங்களுடைய கேட்டலிஸ்ட் பப்ளிக் ரிலேஷன்ஸ் (Catalyst Public Relations) நிறுவனத்தின் தலைவர் திரு ராம்குமார் சிங்காரம் ஐயா அவர்களுடைய ஏற்பாட்டின் பேரில் 12 பேர் கொண்ட எங்களுடைய அலுவலக குழு கொடைக்கானல் சுற்றுப்பயணம் சென்றிருந்தோம். அவரும் எங்களுடன் வந்ததுதான் இரட்டிப்பு மகிழ்ச்சி அளித்தது. இரவு ஒன்பது முப்பது மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து கொடைக்கானல் ரோடு நிறுத்தம் வரை தொடர்வண்டியில் பயணித்தோம். பிறகு அங்கிருந்து ஒரு வேன் மூலமாக கொடைக்கானலை சென்றடைந்தோம். சுமார் இரண்டரை மணி நேரம் ஆகிறது கொடைக்கானல் ரோட்டில் இருந்து கொடைக்கானல் உரை சென்றடைவதற்கு. கொடைக்கானல் ரோட்டில் இருந்து அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயங்குகின்றன. கொடைக்கானல் செல்லும் வழியில் மஞ்சளாறு அருவியின் தோற்றம் மிக அழகு. அந்த அருவியானது தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் வந்து தேங்கி நிற்கிறது. மேலிருந்து மஞ்சளாறு அணையின் தோற்றத்தையும் பார்க்க முடியும்.
சில்வர் பால்ஸ் (Silver Cascade Falls) என்ற இடம் இருக்கிறது. அங்கே குளிக்க முடியாது அந்த அழகு ரசித்து கொள்ளலாம். வெள்ளியைப் போன்று அருவி கொட்டுவதால் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
மோயர் பாயிண்ட் (Moyar Point) இங்கே முழுவதும் பனி மூட்டமாக இருந்தது. உள்ளே செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் 10 ரூபாய் கட்டணம். இயற்கையின் அழகை ரசிக்கலாம். மேகத்துக்குள் இருக்கும் உணர்வு வரும்.
பைன் மரக்காடு (Pine Tree Forest)
இங்கே பைன் மரங்கள் அதிகமாக உள்ளது. இது ஒரு அமைதியான இடமாக இருந்தது. உயர உயரமான மரங்கள் நூற்றுக்கணக்கில் இருந்தது. அதில் சில மரங்கள் விழுந்திருந்தன. இதன் நடுவே ஒரு சிறிய நீரோடை இருந்தது.
குணா குகை (Guna Caves)
கமலஹாசன் நடித்து வெளிவந்த குணா என்ற படக்காட்சிகள் இங்கே எடுக்கப்பட்டதால் அந்த குகைக்கு குணா குகை என பெயர் வந்தது. ஆனால் பல்வேறு நபர்கள் அந்த குகைக்குள் செல்லமுற்பட்டு உயிரிழந்ததால் அந்த அந்த குகைக்கு செல்லும் வழி அடைக்கப்பட்டுள்ளது. ஆனால் மேலிருந்து அந்த குகையை பார்க்க முடியும்.
நுழைவுக்கட்டணம் : 10 ரூபாய்.
தூண் பாறை : பில்லர் ராக் (Pillar Rock View Point)
இங்கே பில்லர் ராக் என்ற தூண் பாறை பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். சில நேரங்களில் மேகங்கள் மறைத்து கொள்வதால் நம்மால் சரியாக படமெடுக்க முடியாது. ஆனால் இதன் இயற்கை காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கும்.
நுழைவு கட்டணம் : 5 ரூபாய்.
கொடைக்கானல் ஏரி படகுப்பயணம் ( Kodaikkanal Lake Boating)
1863 - ஆம் ஆண்டு அப்போதைய மதுரை மாநகரின் ஆட்சியாளரான திரு. சரி ஆங்கிலேயேர் சர் ஹென்றி லெவிங்கெ (Sir Vere Henry Levinge ) என்பவர் கொடைக்கானல் நகரத்தின் மையத்தில் 24 ஹெக்டரில் செயற்கை கொடைக்கானல் ஏரி நிறுவ காரணமானவர் ஆவார். இந்த கொடைக்கானல் ஏரியில் முதல் முதலில் தூத்துக்குடியிலிருந்து கொண்டுவரப்பட்ட பலகை வைத்துதான் பயணம் செய்தனர். 1887 - ஆம் ஆண்டு முதல் கொடைக்கானல் போட் கிளப் (Kodaikkanal Boat Club) செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த கிளப்பின் பெயர் இங்கிலீஷ் கிளப் ( English Club) என்று இருந்தது. 1970 - ஆம் ஆண்டு கொடைக்கானல் கிளப் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
படகுப் பயண கட்டணம் :
2 இருக்கை மிதி படகு ( 2 Seated Pedal Boat )
அரை மணி நேரம் - 100 ரூபாய்
ஒரு மணி நேரம் - 200 ரூபாய்
4 இருக்கை மிதி படகு ( 4 Seated Pedal Boat )
அரை மணி நேரம் - 180 ரூபாய்
ஒரு மணி நேரம் - 360 ரூபாய்
துடுப்பு படகு (Row Boat)
இதில் 6 நபர்கள் வரை பயணம் செய்யலாம்.
20 நிமிடங்களுக்கு - 330 ரூபாய்
40 நிமிடங்களுக்கு - 660 ரூபாய்
சிக்காரா துடுப்பு படகு ( Shikara Boat : Honeymoon Boat )
இது இரண்டு நபர்களுக்கு மட்டுமானது.
20 நிமிடங்களுக்கு - 495 ரூபாய்
40 நிமிடங்களுக்கு - 990 ரூபாய்
(ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் இல்லை)
கொடைக்கானல் ஏரியை சுற்றி மிதிவண்டி பயணம் ( Lake Side Cycling)
கொடைக்கானலை சுற்றியுள்ள சாலையில் மிதிவண்டி பயணம் (Cycling) செல்லலாம். இதன் சுற்றளவு 5.6 கிலோ மீட்டர் ஆகும். ஒரு நபர் ஓட்டும் மிதிவண்டியின் கட்டணம் அரை மணி நேரத்திற்கு : 50 ரூபாய்.
இருவர் ஓட்டும் மிதிவண்டியின் கட்டணம் அரை மணி நேரத்திற்கு : 100 ரூபாய்.
மலைமீது இருந்து கொடைக்கானல் ஏரியின் காட்சி (Upper lake view)
கடல்மட்டத்திலிருந்து 2285 - அடி (Feet) உயரமுள்ள மலையிலிருந்து கொடைக்கானல் ஏரியின் அழகை பார்க்கலாம்.
கோக்கர்ஸ் வாக் ( Coaker's Walk )
கொடைக்கானல் ஏரியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். இயற்கையின் அழகு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் சந்திக்க முடியும் என்றாள் அது சாத்தியமே. பல மலைகள் இந்த மலைக்கு கீழே இருக்கிறது. நாம் நடந்து செல்லும் போதே மேகங்கள் நம்மை அரவணைத்துக் கொள்கின்றன. மிகச் சிறந்த இடம்.
நுழைவு கட்டணம் : 20 ரூபாய்.
வட்டகணல் அருவி ( Vattakanal Falls)
குளிப்பதற்கும், புகைப்படம் எடுப்பதற்கும் சிறந்த இடம். ஆழம் குறைவாக இருந்தது. சிறிய அருவி தான். ஆனால் பெரிய உற்சாகம் அளிக்கக்கூடியதாக இந்த வட்டகணல் அருவி உள்ளது.
டால்ஃபின் நோஸ் (Dolphin's Nose)
வட்டகணல் அருவியிலிருந்து நடந்தே சென்று விடலாம் இந்த டால்பின் நோஸ் என்ற இடத்திற்கு. சிறந்த மலை நடை பாதையாக இருந்தது. செல்லும் வழியில் ஒரு சிறிய அருவி இருந்தது. குதிரை மூலம் தான் பொருள்களை கீழே இருக்கும் கிராமங்களுக்கு கொண்டு செல்கிறார்களாம். மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால்கூட மலையேறி தான் வரவேண்டும். கீழே இறங்க இறங்க சில கிராமங்கள் இருப்பதாக அங்கே கடை வைத்திருந்த ஒருவர் கூறினார். பள்ளிகளுக்கும் அங்கிருந்து 6 கிலோமீட்டர் செல்ல வேண்டும்.
சிலர் டால்பின் நோஸ் பாறையிலிருந்து ஆபத்தான முறையில் படம் எடுத்துக் கொண்டிருந்தனர். படத்தைவிட பாதுகாப்பு முக்கியம் எனக் கருதி நான் தவிர்த்துவிட்டேன்.
எக்கோ பாயிண்ட் (Echo Point)
டால்பின் நோஸ்க்கு மிக அருகிலேயே எக்கோ பாயிண்ட் இடமிருந்தது. அங்கே நாம் கத்தினாள் நமது குரல் நமக்கே மறுமுனையில் கேட்கும். ஜீவா நடித்த ராம் படத்தின் காட்சிகள் இங்கே படம் பிடிக்கப்பட்டுள்ளது. இங்கே படப்பிடிப்பு கருவிகளை கொண்டுவருவது சற்று கடினம் தான் என அங்கே சென்ற பிறகுதான் புரிந்தது.
புனித சலேத் மாதா ஆலயம் (Saleth Matha Church)
ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சர்ச் ஆகும். பழமை மாறாமல் அப்படியே இருந்தது. உள்ளே சென்று ஒரு வணக்கம் செலுத்திவிட்டு வந்தேன். இங்கே நிறைய படப்பிடிப்புகள் நடந்துள்ளதாக அங்கே இருந்த கடைக்காரர் தெரிவித்தார்.
பிரையண்ட் பூங்கா (Bryant Park)
இந்த பூங்கா மிகவும் அருமையாக இருந்தது. படம் பிடிப்பதற்கும் ஓய்வெடுக்கும் சிறந்த இடம்.
நுழைவு கட்டணம் - 30 ரூபாய்
இறுதியாக மாலை 4.30 மணிக்கு கொடைக்கானலில் இருந்து புறப்பட்டு விட்டோம். மலையில் இருந்து இறங்கிய உடன் ஈடன் கார்டன் உணவகத்தில் இரவு உணவை முடித்துவிட்டு "வந்தாரை வாழவைக்கும் சிங்காரச் சென்னையை" நோக்கி பயணத்தைத் தொடங்கினோம்.