சென்னை எழும்பூரில் இருந்து சரியாக காலை 7.30 மணிக்கு பயணத்தை தொடங்கினோம். இந்த சுற்றுலாவில் தமிழ் ஊடகப்பேரவையின் நிறுவனர் திரு. க.ஜெயகிருஷ்ணன் ஐயா அவர்கள், தமிழ் ஊடகப்பேரவையின் தலைவர் திரு.ஆ. வி. முத்துப்பாண்டி அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
காலை 10.00 மணிக்கு வேடந்தாங்கலை அடைந்தோம். நாம் செல்லும் வழியிலேயே பச்சை பசுமையான வயல் வெளிகளும், இதமான தென்றல் காற்றும் நம்மை வரவேற்றது. கடல்மட்டத்திலிருந்து 122 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த பறவைகளின் சரணாலயம். இதன் அதிகபட்ச ஆழம் 5 மீட்டர் ஆகும். 74 ஏக்கர் சுற்றளவு கொண்டது. 1858- ஆம் ஆண்டு இப்பகுதியில் வாழும் மக்களின் கோரிக்கையை ஏற்று செங்கல்பட்டு ஆட்சியின் கட்டளையால் நிறுவப்பட்டது. பின்பு 1936- ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அந்த ஏரி ஒரு சரணாலயமாக அங்கீகரிக்கப்பட்டது. 1988- ஆம் ஆண்டு ஜீலை 8 - ஆம் தேதி வேடந்தாங்கல் ஏரி பறவைகளின் சரணாலயம் என பிரகடனப்படுத்தப்பட்டது. 250 ஏக்கர் நிலப்பகுதிக்கு நீர் வினியோகம் இந்த ஏரியில் இருந்து செய்யப்படுகிறது.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் நமக்கு இதமான மனநிலையை ஏற்படுத்திக் கொள்ள சிறந்த இடமாகும். அந்த பறவைகளின் கூச்சல்களும், அவைகள் சுற்றித்திரிவதை நம் கண்ணால் பார்பதும் பேரழகு. நம்மை அறியாமலேயே நம்முடைய மனதில் உள்ள இறுக்கங்களை தளர்வதை உணரமுடியும். நாம் அங்கிருந்து திரும்பும்போது ஒரு உற்சாகமான மனநிலையை அடைய முடியும்.
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு செல்ல சிறந்த காலம் நவம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை. இந்த காலகட்டத்தில் தான் வெளிநாட்டு பறவைகளின் வரவு அதிகமிருக்கும். பறவைகள் கூடுகட்டுவதையும், அவற்றை பராமரிப்பதையும் அங்கே உயரத்தில் வைத்துள்ள பைனாகுலர் வழியாக பார்த்து ரசிக்கலாம்.
நாங்கள் பறவைகள் சரணாலயத்தை சுற்றிப்பார்த்துவிட்டு நண்பர் திரு. ஆதி அவர்களின் அழைப்பை ஏற்று உலக நல்வாழ்வு இயற்கை மையத்திற்கு சென்றோம். திரு. ஆதி அவர்கள் உலக நல்வாழ்வு இயற்கை மையத்தின் நிர்வாகி ஆவார். சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர். பழங்களை மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்பவர். அவர் மட்டுமின்றி அவருடை குடும்பத்தினரும் அவர் வழியை பின்பற்ற வைத்துள்ளார். நாங்கள் வரவிருக்கும் செய்தியை முன்கூட்டியே தமிழ் ஊடகப்பேரவையின் தலைவர் அவர்கள் தெரியப்படுத்திவிட்டார். அதனால் ஆதி அவர்கள் பறவைகள் சரணாலயத்திற்கே வந்து அழைத்து சென்றார். வரும்போதே அவர் எங்களுக்காக கேரட் கீர் தயாரித்து எடுத்து வந்திருந்தார்.
12.30 மணி அளவில் உலக நல்வாழ்வு இயற்கை மையத்தை அடைந்தோம். பறவைகள் சரணாலயத்திலிருந்து சரியாக 5 கிலோமீட்டர் தொலைவில் அவர்களுடைய மையம் இருந்தது. முதலில் எங்களை வரவேற்றவர் ஆதி அவர்களின் அன்பு மகள் நிருபா, 10 வயதிலேயே மிகத் தெளிவான உரையாடல் அவளிடம் இருந்தது. அவளிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எந்த வகுப்பு படிக்கிறாய் என்றேன். நான் இயற்கையை படிக்கிறேன் அண்ணா என்றாள். எனக்கு ஒரு ஆச்சரியம் மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபட்டு காணப்பட்டாள். 10 - ஆம் வகுப்பு தேர்வை தனி தேர்வர்கள் முறையில் எழுதிக் கொள்வேன் என தைரியமாக கூறினாள். விவசாயம் தான் எனது துறை என இப்போதே முடிவெடுத்துவிட்டு இயற்கையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் நிச்சயமாக நல்ல நிலைக்கு வருவாள், வரவேண்டும் என நினைத்துக் கொண்டேன். தொடர்ந்து எங்களுக்கு அவர்களுடைய தோட்டத்தை சுற்றிக்காட்டினார் திரு. ஆதி அவர்கள். சுற்றிக் காட்டிக் கொண்டிருக்கும் போதே தற்சார்பு வாழ்க்கை பற்றிய விளக்கத்தை அளித்தார் ஆதி. தொடர்ந்து அதைப்பற்றிய கலந்துரையாடல்கள் நிகழ்ந்தது.
மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அடுப்பில்லாமல் இயக்கை உணவு உற்கொண்டோம். அவில், பீட்ரூட் ஊறுகாய், பாயாசம் மற்றும் பல பழங்களை மதிய உணவாக அளித்தனர். வழக்கமாக உட்கொள்ளும் உணவு முறையிலிருந்து சற்று மாறுபட்டு இருந்தது. அந்த இயற்கை உணவுகளை தயாரிக்கும் முறைகளும் மிகவும் எளிமையாக இருந்தது. திரு. ஆதி அவர்களின் வாழ்வினையர் திருமதி. கோமதி ஆதி அவர்களிடம் ஒவ்வொரு உணவும் எப்படி தயாரித்தார் என்ற செயல்முறை விளக்கத்தை கேட்டு தெரிந்து கொண்டேன்.
இயற்கை நமக்கு அளித்ததை அப்படியே ஏற்றுக்கொள்ளும்போது அதில் ஒருவிதமான இன்பம் கலந்துள்ளதை உணர முடிந்தது. உணவு முடிந்தவுடன் இல்லற வாழ்க்கை - குடும்ப உறவை மேம்படுத்துவதின் அவசியத்தைப்பற்றி ஆதி அவர்கள் உரையாற்றினார். அந்த உரையாடல் முடிந்தவுடன் அங்கிருந்து புறப்பட தயாரானோம் உடனே திருமதி. கோமதி அவர்கள் தயாரித்து வைத்திருந்த இயற்கை உணவு பொட்டலங்களை அனைவருக்கும் வழங்கினார். மாலை 4 மணிக்கு உலக நல்லவாழ்வு மையத்திலிருந்து புறப்பட்டோம். 4.30 மணிக்கு மேல்மருவத்தூரில் உள்ள ஏரிக்கு பறவைகளை பார்வையிட சென்றோம்.
மேல்மருவத்தூர் செல்லும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு இடம் மேல்மருவத்தூர் ஏரி. மேல்மருவத்தூரில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் பறவைகளை ரசித்துக் கொண்டே ஒரு நடை பயணம் சென்றோம். சாலைக்கு வலதுபுறம் பறவைகள் நிறைந்த ஏரியும், இடதுபுறம் வயல்வெளியும், தென்னை மரங்களும், நிரம்பி வழியும் கிணறும் பரவசப்படுத்தியது. மேல்மருவத்தூர் ஏரியை பார்த்துவிட்டு எங்களுடன் உடன் இருந்து வழிகாட்டிய நண்பர் திரு. ஆதி அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டோம். சரியாக 7 மணிக்கு சென்னை வந்தடைந்தோம். ஒரே நாளில் இப்படியொரு அனுபவத்தை பெற்ற மகிழ்ச்சியில் அனைவரும் வீட்டிற்கு திரும்பினோம்.
பட்டை கழுத்து சின்ன ஆந்தை(Indian Scopsowl)
சிறிய உப்புக்கொத்தி (Little ringedplover)
நீர்க்காகம் (Cormorant)
பழுப்பு தலை கடற்பறவை (Brown- headed)
குறைக் குருவி (Rosy starling)
கல் திருப்பி உள்ளான் (Ruddyturnstone)
பட்டை வால் மூக்கன் (Bartailed Godwit)
பச்சைக்கால் உள்ளான் (Common green shank)
குதிரைமலை கோட்டான் (Far Eastern curlew)
பவளக்கால் உள்ளான் (Black – winged stilt)
புள்ளி ஆந்தை (Spotted owlet)
சிறு நீல மீன்கொத்தி (Common kingfisher)
அமுர் வல்லூறு (Amur falcon)
மண் கொத்தி (Terek sandpiper)
மீசை ஆலா (Whiskered tern)
அக்காக் குயில் (Common hawk- cuckoo)
நீலவால் பஞ்சுருட்டான் (Blue- tailed bee eater)
தூக்கணாங்குருவி (Baya weaver)
புதர் சிட்டு (Pied bush chat)
வெண்தொண்டை மீன் கொத்தி (White throated kingfisher)
மணல்நிற உப்புக்கொத்தி (Pacific golden plover)
பனங்காடை (Indian roller)
செம்போத்து (Greater coucel)
பெரும் பூநாரை (Greater Flamingo)
மாங்குயில்(Golden oriole)
கருந் தொப்பி ராக்கொக்கு (Night heron)
கரண்டிவாயன் (Eurasian spoonbill)
சிவப்பு மூக்கு ஆள்காட்டி (Red- wattled lapwing)
குருட்டுக் கொக்கு (Indian pond heron)
நீலச் சிறகு கோழி (Garganey)
கானாங்கோழி (Common Moorhen)
பெரிய கொக்கு (Great egret)
நீலச்சிறகி (Garganey)
உண்ணிக் கொக்கு (Cattle egret)
பாம்புத் தாரா (Darter)
சீழ்க்கைச் சிரவி (Fulvous whistlilng duck)
வெள்ளை அரிவாள் மூக்கன் (whitelbis)
புள்ளி மூக்கு வாத்து (Spot bill duck)
சாம்பல் நாரை (Grey Heron)
ஊசிவால் வாத்து (Northern Pintail)
அரிவாள் மூக்கன் (Glossy ibis)
சிறுமுக்குளிப்பான் (Little grebe)
நத்தை குத்தி நாரை (Asian openbill stork)
கிளுவை (Common teal)
கூழைக்கடா (Grey pelican)
கொண்டை நீர்க்காகம் (Indian Cormorant)
மஞ்சள் மூக்கு நாரை (Painted stork)
ஆண்டிவாத்து (Northern shoveler)
இரட்டைவால் குருவி (Black drongo)
போன்ற பல பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ளது.
விரைவில் அடுத்த இடத்திற்கு சுற்றுலா செல்ல ஆயத்தமாகி வருகிறோம். இதே போல் நீங்களும் சுற்றுலா செல்ல விரும்பினால் வெல்மின் நிறுவனத்தை 7708172315 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.